சட்டமா அதிபருக்கு மீள அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

சட்டமா அதிபருக்கு மீள அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் ஓய்வு பெற்ற காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மேலதிக நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு மீள அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜின்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது

இதன்போது, சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்க பெறவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தது.

இதற்கமைய சட்டமா அதிபருக்கு குறித்த மீள அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை மீதான மேலதிக விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மீதான முதற்கட்ட விவாதம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது