இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் - தென் மாகாண ஆளுநர் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகொப் இன்றைய தினம் தென் மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் ஒரு கட்டமாக அவர் தென் மாகாண ஆளுநர் விலி கமகேவை சந்தித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.இதனையடுத்து, அவர் தென் மாகாண பிரதான செயலாளர் ஆர்.சி. டீ சொய்சாவை சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை இந்தியாவுக்கிடையேயான அபிவிருத்தி திட்டங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை கொழும்பில் வைத்து சந்தித்திருந்தார்

இதன்போது, வடக்கிலுள்ள 3 தீவுகளை, காற்றலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரையும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகொப் கடந்த மாத ஆரம்பத்தில் பிரத்தியேகமாக தனித்தனியே சந்தித்திருந்தார்.
அத்துடன் மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதன் மூலம், அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகொப் உடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய கலந்துரையாடலை நடத்தியிருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இணைத் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரை சந்தித்திருந்தனர்