மேற்கு முனைய அபிவிருத்திப் பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

மேற்கு முனைய அபிவிருத்திப் பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு, துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டில் இணைய உள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக அமைச்சின் ஊடாக இதற்காக அனுப்பப்பட்ட கடிதம் தமது தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகள் தமது தரப்பிற்கு உரித்தாகுவதோடு, அதனை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக அதானி நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகள் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து ஏற்றுக்கொண்டிருந்தார்.

எனினும், அதானி நிறுவனத்தை தாம் பரிந்துரைக்கவில்லை என இந்தியா அராங்கம் அறிவித்துள்ள நிலையில், அரசாங்கத்தில் உள்ள சிலர் அந்த நிறுவனத்துடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக சுயாதீன துறைமுக சேவை சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தின் மேற்கு முனையம் என்பது தனியாருடைய சொத்து அல்ல.

எனவே, அதனை அபிவிருத்தி செய்ய தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதை தாம் எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதானி நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு தாமும் எதிர்ப்பு வெளியிடுவதாக அகில இலங்கை துறைமுக பொது சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்துள்ளார்