ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் பதிலளிக்க பின்னிற்பதில்லை - கெஹெலிய ரம்புக்வெல்ல

ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் பதிலளிக்க பின்னிற்பதில்லை - கெஹெலிய ரம்புக்வெல்ல

ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில், பெருந்தோட்ட நிறுவனங்கள் முரண்பாடான கொள்கையை பின்பற்றுமாயின், அதற்கு பதிலளிக்க பின்னிற்பதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இணையவழி ஊடக சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, ஆயிரம் வேதன உயர்வு வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண, வேதன நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான சட்ட ரீதியான நிலைமைகளுக்கு நீதிமன்றில் பதிலளிக்க தொழில் அமைச்சு தயாராகவுள்ளது.

அதற்கு அப்பாற்சென்று இந்த முயற்சியையை முறியடிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயற்சிக்குமாயின், ஏனைய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், அவசியமான சூழலையும் ஏற்படுத்தவும் அரசாங்கம் பின்னிற்காது என்பதையும் தெளிவாக கூறுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அந்தத் தீர்மானமானது, பாதீடு முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பாகும் என குறிப்பிட்டார்.

எனவே, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பும், கடப்பாடும் அரசாங்கத்திற்கு உள்ளது.

அது தொடர்பான தரவுகளும், அதற்கான இயலுமையும் ஆராயப்பட்டே அந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது.

எனவே, முரண்பாடான கொள்கை பின்பற்றப்படுமாயின், அதற்கு பதிலளிக்கவும், அந்தப் பணிகளை அவ்வாறே முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் பின்னிற்காது என்பதை மிகத்தெளிவாக கூறுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்