சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் – கையூட்டல் ஆணைக்குழு விசாரணை

சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் – கையூட்டல் ஆணைக்குழு விசாரணை

சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சூலாநந்த விக்ரமரத்னவிடம் எமது செய்திப் பிரிவு வினவியபோது, இது தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான மோசடி அறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறே கொள்வனவு செய்த பெறுமதியை காட்டிலும் குறைந்த விலையில் சதொசவினூடாக சீனியை விற்பனை செய்தமை தொடர்பிலும் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்துடன் இவ்வாறு சீனியை விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனம் எந்த காரணத்துக்காக முன்வந்தது என்பது தொடர்பில் இதன்போது, விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

சீனி வரிமோசடி தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது