இலங்கை அணிக்கு 40 சதவீத அபராதம் விதிப்பு: தனுஷ்க குணதிலக்கவும் கண்டிக்கப்பட்டார்!

இலங்கை அணிக்கு 40 சதவீத அபராதம் விதிப்பு: தனுஷ்க குணதிலக்கவும் கண்டிக்கப்பட்டார்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அண்டிகுவாவில் இடம்பெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு போட்டிக்கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சகலதுறை ஆட்டவீரர் தனுஷ்க குணதிலக்கவும் கண்டிக்கப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, இரண்டு ஓவர்களில் பந்து வீசுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டமைக்காக  இந்த அபராதத்தை விதிக்குமாறு ஐசிசி போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சர்ட்சன் அறிவித்தார்.

ஐசிசி விதிமுறைகளின் 2.22 உறுப்புரைக்கமைய, உரிய நேரத்தை விட அதிகளவான நேரமெடுத்து வீசப்படும் ஒவ்வொரு ஓவர்களுக்கும் அணியொன்றின் வீரர்களின் போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக செலுத்தப்பட வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமது அணியின் மீதான குற்றச்சாட்டை அணியில் தலைவர் திமுத் கருணாரத்ன ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணைகள் அவசியமல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி போட்டியில் ஐசிசி விதிகளை மீறியமைக்காக இலங்கையின் சகலதுறை ஆட்டவீரர் தனுஷ்க குணதிலக்க கண்டிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கான ஐசிசி விதிமுறையின் 2.5 உறுப்புரையை தனுஷ்க மீறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டமிழக்கப்பட்டதன் பின்னரான ஆக்ரோஷத்தை வெளிக்காட்டும் வகையிலான தகாத வார்த்தை பிரயோகம் மற்றும் சைகையை பயன்படுத்தியமை என்பவற்றுக்காக அவர் கண்டிக்கப்பட்டுள்ளார்.

35 ஆவது ஓவரில் தான் ஆட்டமிழந்ததையடுத்து, மேற்கிந்திய வீரர் நிக்கலஸ் பூரனை நோக்கி தனுஷ்க இவ்வாறு தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்மீதான குற்றச்சாட்டை தனுஷ்க குணதிலக்க ஏற்றுக்கொண்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆடுகளத்தில் கடமையிலிருந்த போட்டி நடுவர்களான ஜோயல் வில்சன் மற்றும் லெஸ்லி ரெய்பர், மூன்றாம் நடுவரான க்ரகரி ப்ரத்வெய்ட் மற்றும் நான்காம் நடுவர் நிகல் ட்யூகய்ட் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்