
இலங்கையில் புர்கா தடைக்கு பாகிஸ்தான் கவலை
புர்காவை தடை செய்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸாட் கஹட்டாக் (Saad Khattak), புர்கா உடையை இலங்கையில் தடை செய்வது சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பூகோள ரீதியான முஸ்லிம்களின் மனோ நிலையை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக பொருளாதார பிரச்சினை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கும் தருணத்தில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.
பாதுகாப்பு என்ற பெயரில், இந்த விடயத்தை முன்னெடுப்பது, சர்வதேச ரீதியாக, பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இதுதவிர, சர்வதேச ரீதியாக நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் விடயமாக கருத முடியும் என்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகளர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் இந்த ட்விட்டர் பதிவை வரவேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன், இந்தப் பிரச்சினை தற்போது எடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், சகல இலங்கையர்களும் ஒன்றிணையும் பட்சத்தில், பால், இனம் மற்றும் மதங்களைப் பாதுகாத்து, சமாதானம் மற்றும் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்