புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட ஏற்பாடு

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட ஏற்பாடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை அதிகரிக்கும் விடயம் தொடர்பில், பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கத்திற்கு, எதிர்வரும் சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை, வழங்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியீடு காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும். குறித்த இயக்கத்தின் பிரதிநிதிகளும் இணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

கொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த அவர்கள், பிரதமர் காரியாலயம் வரையில் பேரணியாக சென்றனர்.

இதையடுத்து, அவர்கள் அலரிமாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில், பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாக, பிரதமரின் மேலதிக செயலாளர் எம்.ஏ.வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர்