நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான உரையாடல் தீர்மானமிக்கது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில், நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலானது, ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானமிக்கது என த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மான வரைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தத் தீர்மான வரைவு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலானது, அது குறித்த கலந்துரையாடலுக்கானதாக இருக்கலாம் என்று ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில், அது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனினும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக்குரிய விடயங்களுக்குள் அவை இடம்பெற்றிருக்கக்கூடும்.
இரு நாடுகளின் தலைவர்களும், முக்கியமான முன்னேற்றங்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், தமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமையளிக்கும் இந்தியாவின் கொள்கையில், இலங்கையை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளாரென இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டம் கிடைக்காமல் போனமை, வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் சீனாவின் திட்டங்களுக்கு அனுமதியளித்தமை என்பன தொடர்பில் இந்திய அரசாங்கம் மகிழ்ச்சியற்றிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின்போது, இந்தியா பெரும்பாலும் வாக்களிப்பைத் தவிர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வாக்கெடுப்பு நெருங்கும்போது, உறுப்பு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் தீர்மானமிக்க கலந்துரையாடல்களில், இந்தியாவுக்கு முக்கியத்துவமிக்க பங்கினை ஆற்ற முடியும் என்றும் ஹிந்து நாளிதழ் செய்தியாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்