சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பேச் மீண்டும் தெரிவு!
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த சட்டத்தரணியான தோமஸ் பேச் (66) நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இணையவழி சந்திப்பின் மூலம் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 137ஆவது பொதுச் சபை கூட்டத்தின்போது, உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பும், வாக்கெடுப்பும் நடைபெற்றது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 93 – 1 என்ற அடிப்படையில் பேச் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.
தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தோமஸ் பேச் , கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை 23 ஆம்திகதி தொடங்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்.
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தோமஸ் பேச், தனது 37 ஆவது வயதில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக இணைந்ததுடன், அதில் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
அத்துடன் தலைவராக தெரிவாவதற்கு முன்னதாக 11 வருடங்கள் ஒலிம்பிக் குழு உப தலைவராகவும் பேச் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆதரவு அளித்த உறுப்பினர்களுக்கு தோமஸ் பேச் நன்றி தெரிவித்த போது...
படங்கள்: சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)