டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை?

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பெரும்பாலான நாடுகள் பங்குபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத தற்போதைய சூழலில் வெளிநாட்டு ரசிகர்களை ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்க வழங்க வாய்ப்பில்லை.

இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து அந்த நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று  58 சதவீதமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு 47 சதவீதமானோர் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும், 44 சதவீதமானோர் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.