வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்?

வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்?

மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தின் நடுப்பகுதியில் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதாயின் அதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இறுதி செய்யப்படாத புதிய மாகாண சபை சட்டத்தை நாடாளுமன்ற யோசனையின் ஊடாக அகற்ற வேண்டும்.

அவ்வாறில்லாவிடின் புதிய சட்டம் இருக்கும் நிலையில், பழைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்துவது தொடர்பிலான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.

அந்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும் தயாரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தற்போதைய கொவிட் 19 பரவல் தொடர்பான சுகாதார பரிந்துரைகளும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அதன் செயலாளர், சட்ட வல்லுனர்கள் மற்றும் சுகாதார பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்