உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட்டினால் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கை

உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட்டினால் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட்டின், இலங்கை தொடர்பான அறிக்கை நேற்றைய தினம் பேரவையில் முன்வைக்கப்பட்டது.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் குறித்த அறிக்கை, உயர்ஸ்தானிகரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில், உண்மையான உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறைகனை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் தமது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேநேரம், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகள், வியூகங்கள், கொள்கைகள், வரலாற்றில் இடம்பெற்ற வன்முறைகள் மீளுருவாவதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ள அவர், அதனூடாக நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் காவல்துறை ஆணைக்குழு முதலான ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 பரவல் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சரீரங்களை கட்டாய தகனம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றமையானது, சிறுபான்மை மக்களுக்கு வேதனையான அனுபவமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நம்பகத்தன்மையுடனான பொறுப்புக்கூறல் செயன்முறை இலங்கையால் பின்பற்றப்படவில்லை என்றும், கடந்த கால ஆணைக்குழு பரிந்துரைகளை மீள பரிசீலித்து, அர்த்தபுஷ்டியான பிரதிபலன்கள் எட்டப்படுமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை மனித உரிமைகள் பேரவை ஆதரிக்க வேண்டும் என்று, அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அந்தனி ஜே ப்லிங்கென் (Antony J. Blinken) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டின் ஆரம்பத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு இன்னும் பொறுப்புக்கூறப்படாதுள்ளது.

இந்தநிலையில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை ஆதரிப்பதற்கு ஊக்கமளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிலவும் மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தல் தொடர்பில் கரிசனைக் கொண்டிருப்பதாக, கூட்டத்தொடரில் காணொளி மூலம் உரைநிகழ்த்திய கனேடிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்சியாக கண்காணிப்படுகிறார்கள்.

சிறுபான்மையினர் தங்களது நினைவேந்தல்களை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.

கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுகின்றன.

இவ்வாறான விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது.

இதுபோன்ற நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையை கண்காணிக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.