இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்று!
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்று சென்னையில் இடம்பெறவுள்ளது.
8 அணிகள் இடையிலான 14-வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரை எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கட் சபை திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து ஒவ்வொரு அணி நிர்வாகமும், தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
இதில் அவுஸ்திரேலிய அணியின் சகல துறை வீரர் மெக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலியை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விடுவித்துள்ளன.
விடுவிக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
அத்துடன் ஏலத்திற்காக புதிய வீரர்களும் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.
மொத்தம் 1,114 வீரர்கள் ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
எனினும் ஐ.பி.எல் நிர்வாகம், அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் 292 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அறிவித்தது.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்திய வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள்.
வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் பிரிமியர் லீக் வீரர்களின் ஏலம் சென்னை உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறவுள்ள இந்த ஏலம் நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.