இலங்கைக்கான புதிய சுவிட்சர்லாந்து தூதுவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை இலங்கைக்கான புதிய சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதிய சுவிட்சர்லாந்து தூதுவர் வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் தம்மை சந்தித்ததாக சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பேரணி சகலரையும் ஒன்று சேர்த்தது.
இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா என்று சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள விக்னேஸ்வரன், 2004 டிசெம்பர் மாதத்தில் ஆழிப்பேரலை ஏற்பட்ட போது போரில் ஈடுபட்டிருந்த இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று நாட்கள் வரையில் உதவி செய்தார்கள்.
அதே போன்று இன்று தமிழ், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் ஆகிய அனைவரும் இன்றைய அரசாங்கத்தின கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள்.
சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைவதாக குறிப்பிட்டுள்ளார்