இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் இலங்கை துறைமுக தொழிற்சங்கங்கள்

இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் இலங்கை துறைமுக தொழிற்சங்கங்கள்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்காக இந்தியாவினதும் ஜப்பானினதும் முதலீடுகளை தொடர்புபடுத்துவதற்கான அறியப்படுத்தல் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகங்கள் அமைச்சின் செயலாளர் யூ.டீ.சீ. ஜயலால் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளின் தூதரக காரியாலயங்களுக்கு இந்த அறியப்படுத்தல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களினால் பெயரிடப்படும் முதலீட்டாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, மேற்கு முனையத்தின் 85 வீத பங்குகள் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் உரித்துடையதாவதுடன், எஞ்சிய 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கு உரித்துடையதாகும்.

இவ்வாறான நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவையும், ஜப்பானையும் தொடர்புபடுத்துவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், மேற்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையினால் அபிவிருத்தி செய்து கொண்டு நடத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியுள்ளது.

13 விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர், துறைமுக அதிகார சபைத் தலைவர் ஆகியோருக்கும் சில தொழிற்சங்கங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தேசிய வளங்களை விற்பனை செய்தல், குத்தகைக்கு வழங்குதல் என்பன மேற்கொள்ளப்படமாட்டாது என வாய்மூலமும், எழுத்துமூலமும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், கடந்த மாதம் 31ஆம் திகதி வெளியிட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, இந்தியாவும், ஜப்பானும் பெயரிடும் நிறுவனங்களுக்கு 85 வீத பங்குகளை 35 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு அந்த அறிக்கையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.