
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் ஒத்துழைக்கும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கமைய, விமான நிலைய பணியாளர்கள், துறைமுக ஊழியர்கள், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் வரையில் நாட்டில் 192,938 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 3,589 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது