வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை மூலம் பணமோசடி செய்த சந்தேகநபர் கைது!
வைத்தியர் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டையின் மூலம் சுமார் 10,000 ரூபா பணத்தை மோசடியாக பெற்ற நபரொருவரை காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் பூஸா, கெந்தவல பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவராவார்.
மேற்படி வைத்தியர் காலி நகரிலுள்ள வங்கிக் கிளையொன்றுக்கு சென்று ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவ்விடத்தில் ஏ.ரி.எம் அட்டையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் ஏ.ரி.எம் இயந்திரத்தை நோக்கிவந்த சந்தேகநபர், அங்கிருந்த அட்டையைக் கொண்டு சுமார் 10,000 ரூபா பெறுதியான மதுபானம், உணவு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தனது அட்டையைக் கொண்டு பணம் பெறப்பட்டுள்ளதாக தனது கைப்பேசிக்கு கிடைத்த குறுந்தகவல் தொடர்பில் மேற்படி காவல் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர், குறித்த வர்த்தக நிலையத்துக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளின் மூலம், வைத்தியரின் அட்டையைக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தவரை அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒரு சுற்றுலா வழிகாட்டி என சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர், உனவட்டுன பிரதேசத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது, காவல்துறையினரால் காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த சந்தேகபரை பெண்ணொருவர் அடையாளம் காட்டியதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.