கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதா..? தகனம் செய்வதா..?

கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதா..? தகனம் செய்வதா..?

கொவிட்-19 சரீரங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு தாம் உள்ளிட்ட குழு அனுமதி வழங்கியதாக, கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவேண்டிய முறைமை தொடர்பில் பரிந்துரை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அந்த நிபுணர் குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா, எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

அடக்கம் செய்வதற்காக, விசேட நிபந்தனைகளுடன் அதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முனசிங்கவினால், கடந்த டிசம்பர் மாதம் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதன் தலைவராக, இலங்கை தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய்கள் நிறுவகம் மற்றும் இல்ஙகை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட பேராசிரியருமான ஜெனிபர் பெரேரா நியமிக்கப்பட்டார்.

எனினும், அந்தக் குழுவின் பரிந்துரை இதுவரையில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில், குறித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது கருத்து தெரிவித்த அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெர்ணான்டோ, அது குறித்து தம்மால் சரியான பதிலொன்றை வழங்க முடியாது என குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தங்களது குழு நியமிக்கப்பட்டதாகவும், அதன் அறிக்கையை 28ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு தாங்கள் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களின் விருப்பத்தின்படி, சரீரங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய முடியும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும், நாங்கள் அடக்கம்செய்ய முடியும் என்று வெறுமனே கூறவில்லை.

சரீரத்தை வீட்டுக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதுடன், மரண பரிசோதனை மேற்கொள்ள முடியாது.

24 மணிநேரத்திற்குள், சரீரத்தை அடக்கமோ அல்லது தகனம் செய்யவோ அனுப்ப வேண்டும்.

அடக்கம் செய்ய வேண்டுமாயின், நீருடன் கலக்காத வகையில், இரண்டு பைகளில் சரீரத்தை வைத்து, அதன் பின்னர் சவப்பெட்டிக்குள் இடவேண்டும் என்றும் தாங்கள் பரிந்துரைத்ததாக சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 5 நிமிடங்களுக்காவது, குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கேணும் சரீரத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் தாங்கள் பரிந்துரைத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.