முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட கூட்டம் இன்று..!

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட கூட்டம் இன்று..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல் உயர்பீட கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், 20 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படுகின்றது.

20 ஆம் திருத்த சட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர் ஆதரவளித்தனர்.

எனினும், முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆம் திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

இந்த நிலையில், கூட்டணியின் முடிவை புறக்கணித்து செயற்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கூடி அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடும் உயர்பீடம் தீர்மானிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என தீர்மானிக்கும் சுதந்திரத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமே வழங்கியதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த விடயம் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.