தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் அடுத்த மாதம்..!
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது பொதுக்கூட்டம் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி ஹேரத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தலவாக்கலை - லிந்துலை நகர சபை ஒன்றுகூடல் அரங்கில், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் முதலாவது பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவியில் இருந்து அசோக்க சேபால நீக்கப்பட்டதாக வர்த்தமானியின் ஊடாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
குறித்த நகர சபையின் தவிசாளர் மீது அதன் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் ஊடாக, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அவர் நகரசபையின் தவிசாளர் என்ற அடிப்படையில் பணிகள் மற்றும் செயற்பாடுகளில் குற்றமிழைத்துள்ளமை உறுதியானது.
இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் பதவியில் இருந்து அசோக்க சேபாலவை நீக்க தீர்மானித்ததாக அந்த வர்த்தமானியில் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.