
“ரஜவாச” ஜனாதிபதி கோட்டாபயவால் திறந்து வைப்பு
நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “State Trust Center” (ரஜவாச) வர்த்தக கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கண்காட்சிக்கூடம் விரிவுபடுத்தப்பட்டு “ரஜவாச” வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 78 அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்திற்கு அமைவாக, அரச தொழில் முயற்சியாளர்களினதும் சுதேச உற்பத்தியாளர்களினதும் தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள நுகர்வோருக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
சுதேச உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வர்த்தக நிலையங்களுக்கு வழங்கும் சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.
நினைவுப் பலகையை திறைநீக்கம் செய்து வர்த்தக கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, வர்த்தக நிலையங்களுக்குச் சென்று உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருடன் கலந்துரையாடினார்.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அலகியவண்ண, ஜனக வக்கும்புர, சஷிந்திர ராஜபக்ஷ, சன்ன ஜயசுமன மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.