பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறையில் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்...!
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மக்கள் வங்கி 3 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய இணைப்பு, மென்பொருள் பொதி மற்றும் 4 வருட உத்தரவாதத்துடன் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
ஒரு கணினியின் பெறுமதி 80 ஆயிரம் ரூபாவாகும்.
தொழிலொன்று கிடைத்த பின்னர் 6 ஆண்டுகளில் மொத்த பெறுமதியை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மாணவராக இருக்கும் காலத்தில் மாதாந்தம் செலுத்த வேண்டிய தொகை 500 ரூபாவாகும்.
2021ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவைப் பெறும் ஆறு புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் அதற்கான கடிதங்களை இன்று முற்பகல் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.