தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை..!

தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன இன்று நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார்.

வேதன நிர்ணய சபையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அதனை ஏற்க முடியாது என்றும், 1000 ரூபாய் வேதனம் சட்டமாக்கப்பட்டால், 13 நாட்களே தொழில் வழங்கப்படும் என்பதோடு கூட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பாக கலந்துக் கொண்டிருந்த ரொசான் ராஜதுரை எச்சரித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரமேஸ் பத்திரன, பெருந்தோட்டத்துறை நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரமுடியாத சூழ்நிலையிலேயே, வேதனநிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், அதனை நிறுவனங்கள் முறையாக அமுலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், பெருந்தொட்டத்துறைகளில் பயன்படுத்தப்படாதிருக்கின்ற காணிகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாகவும், அவ்வாறான காணிகளை அடையாளம் கண்டு சரியான முகாமைத்துவ நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்