இலங்கை அரசு கலாசார பாரம்பரியங்களுக்கு இடமளிக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்து!

இலங்கை அரசு கலாசார பாரம்பரியங்களுக்கு இடமளிக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்து!

இலங்கை அரசாங்கம் மத நம்பிக்கை மற்றும் கலாசார பாரம்பரியங்களை மதித்து, அவற்றுக்கு இடமளிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய் காரணமாக பாரியளவில் உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன.

இலங்கையிலும் அவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகின்ற நிலையில், சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைய இலங்கை செயற்பட வேண்டும்.

இதன் ஊடாக மரணிக்கின்றவர்களின் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு தங்களது கலாசாரத்தின் அடிப்படையில் இறுதி வழியனுப்பலை மேற்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்த டுவிட்டர் பதிவை மீள்பதிவிட்டு தமது கருத்தை பதிவு செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி ரெப்ளிஸ், கொவிட் 19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரத்தை அடக்கம் செய்ய முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் அந்த நடைமுறையை பின்பற்றலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் 19 நோயால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்கள் தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழு, கொவிட் நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை தகனம் செய்வதிலும், அடக்கம் செய்வதிலும் பிரச்சினையில்லை என்ற விடயத்தை சுட்டிக்காட்டி இருந்தது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது