முன்னாள் இராணுவச் செயலருக்கு ட்ரம்ப் ஆவேசமாக பதிலடி

முன்னாள் இராணுவச் செயலருக்கு ட்ரம்ப் ஆவேசமாக பதிலடி

தன்னைப்பற்றி கருத்து தெரிவித்த அந்நாட்டின் முன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு ட்ரம்ப் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபடாது பிரித்தாளும் ஓர் அமெரிக்க அதிபரை முதன் முதலாக ட்ரம்ப் ரூபத்தில் சந்திக்கிறேன் என்று ஜேம்ஸ் மேட்டிஸ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அந்த பேட்டியில் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்திருப்பதாவது, “மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சி போல் பாசாங்கு கூட செய்யவில்லை ட்ரம்ப். மாறாக மக்களை பிரிக்க அவரே முயற்சிக்கிறார். இவரது இத்தகைய 3 ஆண்டுகால விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறோம். 3 ஆண்டுகளாக ஒரு முதிர்ச்சியற்ற தலைமையின் செயல்களைப் பார்த்து வருகிறோம். அவர் இல்லாமலேயே நாம் ஒற்றுமையுடன் இருப்போம், நம் சிவில் சமூகத்தின் வலுவான தன்மையினால் நாம் ஒற்றுமையுடன் இருப்போம்” என்று பேசியிருந்தார். இதற்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த ட்ரம்ப், “எனக்கும், பராக் ஒபாமாவுக்கும் ஒரே விஷயத்தில் ஒத்துப் போகும் என்றால் அது ஜேம்ஸ் மேட்டிஸை நீக்கியதில்தான். உலகிலேயே அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு ஜெனரல் மேட்டிஸ். நான் அவரது ராஜினாமா கடிதத்தைக் கேட்டேன் அது குறித்து எனக்கு மிகவும் பிரமாதமான உணர்வே உள்ளது. அவரது முதன்மை பலம் ராணுவம் அல்ல, தனிப்பட்ட பொது உறவுகளே. அவரை எனக்குப் பிடிக்காது, அவரது தலைமையையும் எனக்குப் பிடிக்காது, எனக்கு அவரிடத்தில் பிடிக்காதது நிறைய உள்ளது. நல்ல வேளையாக அவர் பதவியில் இல்லை.” என்றார்.