கொழும்பு–கோட்டை மற்றும் காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் 18 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!
கொழும்பு – கோட்டை மற்றும் காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 18 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் 103 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் மற்றும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட 674 கொவிட்-19 நோயாளர்களில் 197 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 165 பேருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, பண்டாரவளை – கஹடகஸ்தென்ன பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஹப்புத்தளை பொதுசுகாதார எஸ் சுதர்ஷன் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த 12 ஆம் திகதி அந்த குடும்பத்தில் மகன் ஒருவர் கொழும்பில் இருந்து அங்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்பியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களான தாய் மற்றும் சகோதரிக்கு மேற்கொள்ளப்பட்ட சகோதரிக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக ஹப்புத்தளை பொதுசுகாதார எஸ் சுதர்ஷன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.