நாட்டின் கொரோனா பற்றிய முழுமையான விபரங்கள்...!
கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20, ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 10, 853 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 3569 பேருக்கும் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் 747 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய இரண்டு பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 14 பேரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, ராகம மருத்துவமனையின் இரண்டு தாதியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன் காரணமாக அந்த மருத்துவமனையின் ஒரு அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 2,605 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மெதிரிகிரிய பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் 39 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தகத்தின் உரிமையாளரும், முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை, அளுத்கம காவல் நிலையத்தில் கடமையாற்றும் 4 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்கள் அணைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.