கம்பஹாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 719 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 182 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது
கம்பஹா மாவட்டத்தின் நீர் கொழும்பில் நேற்று 50 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 152 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு, அவர்களில் அதிகமானோர் கொழும்பு 15 மட்டக்குளி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கண்டி மாவட்டத்தில் 75 பேரும், களுத்துறையில் 43 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 37 பேரும், காலி மாவட்டத்தில் 20 பேரும், கேகாலையில் 18 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 11 பேரும் நேற்றைய தினம் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 14ம் திகதி 28 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
யூரி மற்றும், டெமேரியா வீதியை சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் ராஜதுறை தெரிவித்தார்.
இதன்படி, இதுவரையில் பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.
மட்டக்களப்பு - அரசடி 177 ஏ கிராமசேவகர் பிரிவில் நேற்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரில் 5 பேருககு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரிடம் மேற்கொள்ளபட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக மட்டக்களப்பு அரசடி பொது சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன் கிராம சேவகர் பிரிவில் மாத்திரம் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தொழிலுக்காக ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
விஷேட விமானம் மூலம் குறித்த 288 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் அனைவரிடமும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.