நாட்டின் பொருளாதாரம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு கடும் தாக்கம் ஏற்படும்-ரொஹான் சமரஜீவ
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் முதலீடு செய்ய இந்தியாவிற்கு இடமளிக்கப்படாவிடின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு கடும் தாக்கம் ஏற்படும் என போராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
துறைமுக பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பான நடவடிக்கையாகா இந்தியாவுடன் இணைந்து முதலீடு செய்வதே சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயிரத்து 200 நீளம் கொண்ட கிழக்கு முனையத்தில் 440 மீற்றர் பகுதி ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு முனையத்தில் எஞ்சியுள்ள பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக 500 முதல் 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இடையிலான யோசனை ஒன்று அவசியம்.
இதன்படி எஞ்சியுள்ள பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்து உணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கைக்கு அமைய கிழக்கு முனையத்தன் 100 சதவீதமான பூமியின் உரிமை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ளது.
உடன்படிக்கைக்கு அமைய அதன் செயற்பாடுகளின் போது இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 51 சதவீதம் பங்கு கிடைப்பதுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு 49 சதவீதமான பங்கு கிடைக்கப்பெறும்;.
குறித்த திட்டத்தில் முதலீடு செய்வதற்காக 0.1 சதவீதம் வட்டியின் கீழ் கடனை வழங்க ஜப்பான் அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தது.
எனினும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மற்றும் துறைமுக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தைகக்கோ வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
51 சதவீத உரிமை மற்றும் முனையத்தின் நிர்வாகம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் வைத்திருப்பதற்கும் எஞ்சிய 49 சதவீதத்தினை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் வேறு தரப்பினருக்கும் பங்குதாரர்களாக முதலீடு செய்யும் வகையில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கும் சுயாதீனத்திற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் வழங்கப்படாவிடின் அந்த நாட்டின் முதலீடுகள் இழக்க கூடும் என வெளியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் லிலிதசிறி குணவர்தன தெரிவித்துள்ளார்.