போகி கொண்டாட்டம்- சென்னையில் புகை மூட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர். பொருட்களை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக போகியை வரவேற்றனர்.

 


அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரே வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு மூடுபனி மற்றும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

புதுச்சேரியிலும் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பனியுடன் கூடிய புகைமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.