
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் ஆண் ஒருவர் மீட்பு
வவுனியாவில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் ஆண் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வவுனியா அரச முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவரே காயங்களுடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியாசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின்போது அங்கு வந்த குறித்த பெண்ணின் உறவினர் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த நபர் மீது விறகு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் ஒமந்தை பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.