பள்ளிவாசல்களில் 100 பேர் வரை தொழுகை நடத்தலாம்: சுகாதார அமைச்சு
ஐந்து வேளை மற்றும் ஜூம்மா தொழுகையில் கலந்து கொள்ள கூடியவர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் கூட்டு தொழுகைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் மல் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
மூன்று மாதங்களின் பின்னர் கடந்த 12ஆம் திகதி முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொழுகைக்காக திறக்கப்பட்டதுடன் தொழுகையில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சமூக இடைவெளிகளை பேணி, இடவசதிகளுக்கு ஏற்ற வகையில் 100 பேர் வரை தொழுகையில் கலந்து கொள்ள முடியும் எனவும் கூட்டுத் தொழுகைகளை பல முறை நிறைவேற்ற முடியும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொழுகையில் ஈடுபடும் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.