நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..! நேற்றைய தினமும் 3 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் கொவிட் 19 தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 14 பகுதியில் 75 வயதான ஆண் ஒருவர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவர், ரம்புக்கன மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் பின்னர் தேசிய தொற்று நோய் நிறுவகத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் குருதி விஷமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொவிட் 19 நிமோனியா நிலையால் மரணித்தார்.
அதேநேரம் ஹொரணை பகுதியை சேர்ந்த 87 வயதான பெண்ணொருவரும் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.
கடந்த 6 ஆம் திகதி வீட்டில் வைத்து அவர் மரணித்தார்.
கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.