5 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக மரணம்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில், 5 பிள்ளைகளின் தந்தையொருவர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய அந்தோனி சாமி என்பவரே இன்று (08) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
குறித்த நபர் தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தோட்டத்தை விட்டுச் செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும், இன்றைய தினம் அதனை மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.