சுகாதார பாதுகாப்புடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க நடவடிக்கை..!
புதிய பாடசாலை கால ஆரம்பத்தின்போது மாணவர்களை பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்புடன் அழைப்பதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் தரம் 2 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுக்காக எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.
சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல்மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் 11ஆம் தரத்தின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போதும், அவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் போதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இதற்கான பொறுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் அதிபர்களுக்கும் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.