சீரற்ற காலநிலையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகள்..!

சீரற்ற காலநிலையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகள்..!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணம், மொனராகலை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, கல்லடி, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

பல வீடுகளிலும் நீர் உட்புகுந்துள்ள நிலையில் பலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

வீதிகளில் காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களின் குடிசைகளிலும், வீடுகளிலும், காணிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதுடன் வெள்ள அனர்த்தம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்டவர்களின் இடங்களையும், பிரதேசங்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.

இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் பொதுமக்கள், வாகன சாரதிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

போரதீவுப்பற்று பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான், மண்முனைப்பற்று, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து தமது உறவினர்களின் வீட்டில் வசித்து வருவதுடன, ஒருவீடு மழை காரணமாக சேதமடைந்துள்ளதாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலை வளாகத்தில் வெள்ளநீர் காணப்படுவதுடன் மட்டக்களப்பு தொடரூந்து தினைக்களத்தின் வளாகமும், தொடரூந்து தண்டவாளங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்