வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்திற்கு பயணத் தடை!

வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்திற்கு பயணத் தடை!

வவுனியா- பட்டானிச்சூர் பகுதியில் இருவருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கிராமத்தில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் தொழில்நுட்ப பீடத்தின் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், அதே பகுதியினை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளைஇ காத்தான்குடி பிரதேசம் எதிர்வரும் 15ம் திகதிவரை தனிமைப்படுத்தபட்ட பிரதேசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கினைக்கும் அதிகாரி மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்கவின் பங்குபற்றுதலுடன் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டம் எதிர்கொண்டுள்ள தொற்றினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேசத்தில் தற்போது தனிமைப்படுத்தல் அமுலில் உள்ளபோதிலும் மக்கள் எல்லைகளை கடந்து வெளியிடங்களுக்கு சென்றுவருவதாக இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இன்று முதல் காத்தான்குடி எல்லைகளில் காவல் அரண்களை அமைக்க மேஜர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது மாவட்டத்தில் கொரோனா தொற்றினை நீக்க சுகாதார அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்க இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.