நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகாிப்பு!
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,000ஐக் கடந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 515 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,371 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 419 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 83 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட்-19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,628 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 13 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து ஒருவரும், பிரித்தானியாவில் இருந்து 7 பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 3 பேரும், கடலோடிகள் இருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
7,443 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 562 கொவிட்-19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 36,717 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.