நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 557 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 43,856 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய முக்கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,126 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் மற்றும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் நேற்று கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
7 ஆயிரத்து 493 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 826 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 36 ஆயிரத்து 155 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு தலுபொத பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
இதனால் நீர்கொழும்பு வேளாங்கனி தேவாலயத்தின் அருட் தந்தை உள்ளிட்ட பாடல்குழுவின் உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்களாக 54 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் என்.கே.யு.கே குணரட்ன இதனை தெரிவித்தார்.
குறித்த தேவாலயத்தின் பாடல் குழுவில் தொற்றுதியான இரண்டு பேர் இருந்துள்ளமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நீர்கொழும்பில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 333 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.