மட்டு மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

மட்டு மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

மட்டக்களப்பு மாநகரசப எல்லைக்குள் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தொடர்ந்து 3 தினங்களுக்கு மூடப்படுமென மாநகரசபை மேஜர் தியாகராசா சரவணபவன் அறிவித்துள்ளார்.

மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் இன்றிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பூட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

மாநகர சபையில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மட்டக்களப்பு நகரில் நேற்றுமுன்தினம் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வந்து சென்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த செயற்பாடு முடியம்வரை வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாநகரசபை இன்று எடுத்த தீர்மானத்தின்படி எதிர்வரும் 3 தினங்களுக்கும் தொடர்ந்தும் வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்,

இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழும், கொரோனா சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.