சிறைச்சாலைகளில் மேலும் 67 பேருக்கு கொரோனா..!
சிறைச்சாலைகளில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்கள் அனைவரும் ஆண் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் நாட்டை சேர்ந்த முதலாவது சுற்றுலா பயணிகள் குழுவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பீ.சி.ஆர் பரிசோதனைகளில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய குறித்த சுற்றுலா குழுவில் கொவிட்19 தொற்றுறுதியான யுக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 639 பேரில் 190 பேர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் 133 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அவிஸ்ஸாவலை பகுதியில் 83 பேருக்கும், மட்டக்குளிய பகுதியில் 11 பேருக்கும் வாழைத் தோட்டம் பகுதியில் 10 பேருக்கும், கொள்ளுப்பிட்டியில் 6 பேருக்கும், பொரளையில் 4 பேருக்கும், புறக்கோட்டை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் தலா மூவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 50 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கும், கேகாலையில் 19 பேருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கண்டியில் 89 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 18 பேருக்கும், நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் அம்பாறையில் 42 பேருக்கும், காலி மாவட்டத்தில் 10 பேருக்கும், புத்தளத்தில் 2 பேருக்கும், மட்டக்களப்பில் 8 பேருக்கும், கொவிட்19 தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், திருகோணமலையில் 4 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 5 பேருக்கும், பதுளை மற்றும், மொனராகலை மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும், கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதுதவிர, மாத்தறையில் 9 பேருக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா 3 பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக கொவிட்19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் 940 பேருக்கு இவ்வாறு ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் 11 ஆயிரத்து 926 ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களில் 90 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையில் 149 பேருக்கு கொவி;-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தொற்றிலிருந்து இதுவரையில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தொடர்ச்சியாக 10 ஆயிரம் ரூபாபெறுமதியான உணவு பொதிகள் இரண்டு தடவைகளில் அந்தந்த பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படுகின்றன.
இந்த நிலைமையில் மேலும் தொற்று பரவாது இருப்பதற்கு மக்களின் அவதானமான செயற்பாடு மிகவும் முக்கியமானது எனவும் சுகாதார தரப்பினரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.