உருமாறிய கொரோனா வைரஸை, பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்த முடியுமா..?
பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸை, பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்த முடியாது என கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நுண்ணியல் நிபுணர் பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பில் தமது பல்கலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்திச் சேவையிடம் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கேகாலை தம்மிக பண்டாரவின் ஆயுர்வேத ஒளடத பாணிக்கு ஆயுர்வேத நெறிமுறை குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பின்னர் அந்த ஆயுர்வேத பாணி ஆய்வுகூட பரிசோதனைக்காக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திரக்குழு குறித்த பாணிக்கு அனுமதி வழங்கியிருந்தது.
எவ்வாறிருப்பினும், கொரோனா தடுப்பு பாணியை முன்னிறுத்தி , தடுப்பூசிக்காக பொதுமக்களிடம் எழும் கேள்வியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் கீழ், செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.