கொரோனா இரண்டாம் அலையின் தற்போதைய நிலவரம்...!

கொரோனா இரண்டாம் அலையின் தற்போதைய நிலவரம்...!

மேல் மாகாணத்தில் கொவிட் 19 இரண்டாம் அலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 400 பேருக்கு தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 237 பேருக்கு தொற்றுறுதியானது.

அவர்களில் தெமட்டகொடை பகுதியில் 121 பேரும் கிருலப்பனையில் 23 பேரும் வெள்ளவத்தையில் 18 பேரும் மருதானையில் 14 பேரும் கொள்ளுபிட்டியில் 9 பேரும் பம்பலபிட்டியில் 8 பேரும் அடங்கியுள்ளதாக கொவிட் 19 தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிக்கு பின்னர் 17 ஆயிரத்து 728 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் மஹர பகுதியை சேர்ந்த 35 பேரும் நீர்கொழும் பகுதியை சேர்ந்த 11 பேரும் ஏக்கல பகுதியை சேர்ந்த 10 பேரும் அடங்கியுள்ளனர்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 இரண்டாம் அலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 39 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமைக்கு அமைய தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி மேல் மாகாணத்தில் கொவிட் 19 இரண்டாம் அலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய சுமார் 10 ஆயிரம் பேருக்கு இதுவரை ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் இவ்வாறு ஆயிரத்து 359 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட்டி எண்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர்கள் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாண எல்லையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் இதுவரை 61 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அவர்களுடன் தொடர்பை பேணிய 315 பேர் அடையாளங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பசறை பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பசறை பொல்கஹாலந்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கும் டெமேரியா பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்குமே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில் கொழும்பு இருந்து வந்தவர்களுடன் தொடர்புடைய இருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை பொது சுகாதார பரிசோதகர் வி.ராஜதுரை இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதற்கமைய பசறை பகுதியில் இதுவரையில் 24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 41 ஆயிரத் 603 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 33 ஆயிரத்து 221 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்

இந்தநிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் ஆயிரத்து 58 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகய்ய லதாகரன் குறிப்பிட்டார்.