மழை பெய்யும் நேரங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்து!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான கடற்பிராந்தியங்களில் இடைஇடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.