9 மாதங்களின் பின்னர் முதலாவது சுற்றுலா பயணிகள் குழு இலங்கையை வந்தடைந்தது..!
கொவிட்-19 காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் 9 மாதங்களுக்கு பின்னர் முதலாவது சுற்றுலா பயணிகள் குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய யுக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் அடங்கிய குழு மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவர்களுடன் இரண்டு குழந்ததைகளும் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்குள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
ஸ்கை அப் விமானசேவைக்கு சொந்தமாக பீ.கியு 555 ரக விமானத்தில் இலங்கையை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, தற்போது சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக வீசா அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கின்றமையில் இருந்து மீண்டும் தமது நாடுகளுக்கு செல்லும் வரையாலான காலப்பகுதியில் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யுக்ரைன் சுற்றுலா பயணிகள் குழுவுக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்கள் தங்கவுள்ள விருந்தகங்களுக்கு செல்லும் முன்னர் மற்றுமொரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 7 நாட்களுக்குள் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் அவர்கள் 10 நாட்களுக்கு இலங்கையில் தங்கவுள்ளனர்.
கொக்கல பிரதேசத்தில் அவர்கள் தங்கவுள்ளதுடன், அவர்களுக்கு உள்நாட்டு வாசிகள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோய் பரவ ஆரம்பித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி விமான நிலையங்கள் மூடப்பட்டன.
சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அவற்றை மீளத் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ரஷ்யாவில் இருந்து 2ஆயிரத்து 580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.