ஜனவாி 1ம் திகதி முதல் திரையரங்குகள் மீள் திறப்பு!

ஜனவாி 1ம் திகதி முதல் திரையரங்குகள் மீள் திறப்பு!

சுகாதார வழிகாட்டல் நிபந்தனைகளுக்கமைய எதிர்வரும் ஜனவாி 01ம் திகதி முதல் நாடு முழுதும் உள்ள திரையரங்குகளை மீள் திறப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள சினிமா திரையரங்குகள் ஜனவாி 01ம் திகதி முதல் மீள் திறக்கப்படும்.

திரைப்பட தயாாிப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் உட்பட அநேக கலைஞர்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் கலைக்கு மற்றும் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அண்மையில் பிரதமரை சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தனர்.

இதன் பிரதிபலனாக சுகாதார வழிகாட்டல் நிபந்தனைகளுக்கமையவும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமையவும் திரையரங்குகளை மீள் திறப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியாக பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை மீள் திறக்கப்படவுள்ள திரையரங்குகள் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் திரையரங்குகளின் உாிமையாளர்கள் மற்றும் திரைப்படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.