வெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நேற்றைய தினம் பதிவான 592 கொரோனா நோயாளர்களில், 245 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை பகுதியில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
48 நோயாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை ஸ்ரீ விஜய வீதி தோட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 100 பி.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டியில் 42 பேரும், கொள்ளுப்பிட்டியில் 17 பேரும், கிராண்ட்பாஸில் 15 பேரும் மட்டக்குளி மற்றும் கிருலப்பனை முதலான பகுதிகளில் தலா 13 பேரும் கொவிட் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவிசாவளை, கொஸ்கம மற்றும் ருவான்வெல்ல முதலான பகுதிகளில் கொவிட் நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்தக் காவல்துறை அதிகார பிரதேசங்கள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கொழும்பு முதல் அவிசாவளை நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவைகளையும், களுஅக்கல வரையில் மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் நேற்று 140 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் கொரோன தாக்கம் அதிகளவில் காணப்படும் பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அட்டலுகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் எனப்படும் விரைவான பிறபொருள் எதிரியாக்கி பரிசோதனையில் இதுவரையில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரெபிட் என்டிஜன் பரிசோதனை தொகுதிகளை, பரிசோதனைகளுக்காக விநியோகித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து 11 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.