விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்களன்கள் மீட்ப்பு..!
கொத்தமல்லி என்ற பெயரில் உக்ரெய்னில் இருந்து இறக்குமதியான விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் ஒருகொடவத்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலிருந்து இந்தக் கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ரூபாவாகும்.
கொள்கலன்களில் நான்கு கொள்கலன்கள் இன்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, கொள்கலன்களில் விவசாயக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இறக்குமதியாளர்கள் மோசடியில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.
இடைத்தரகர்கள் சூழ்ச்சி செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் சட்டங்களுக்கு அமையவும், சுற்றாடல் சட்டத்திற்கு அமையவும், தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யவோ வைத்திருக்கவோ முடியாது என்பதால், அவற்றை மீண்டும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் ஜயரத்ன கூறினார்.