மக்கள் பொறுப்பற்று இருந்தால் நிலைமை கை மீறிச் செல்லும்! கடுமையான எச்சரிக்கை
பண்டிகை காலத்தில் பெருமளவில் மக்கள் களியாட்ட நிகழ்வுகளில் அல்லது விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொள்வதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என சுகாதார பிரிவுகள் எச்சரித்துள்ளன.
சமூக விலக்கலை புறக்கணித்து கொரோனாவைரஸ் குறித்த விதிமுறைகளை புறக்கணித்து கிறிஸ்மஸ் புத்தாண்டு காலப்பகுதியில் விருந்துபசார நிகழ்வுகளையும் பெருமளவானவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தீர்மானிப்பதால் நாட்டில் கொரோனா வைரஸ் நிலவரம் ஆபத்தானதாக மாறலாம் என நுண்ணுயிரியல் ஆலோசகர் வைத்தியர் சிரானி சந்திரசிரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகம் கொரோனா வைரஸ்பரவலை எதிர்கொள்கின்றது. அதுமுடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை என தெரிவித்துள்ள அவர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டியது மக்களின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் இலங்கையால் கொரோனா வைரசின் முதலாவது அலையை தோற்கடித்தது போல இரண்டாவது அலையையும் தோற்கடிக்கமுடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டால் கொரோனா வைரசினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், புதிய வருடத்தில் நாடு மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.